Aug 1, 2017

அப்படிச் சிரிக்காதீர்கள்


முன்பு போல செங்கால் நாரைகள்
வலசை வருவதில்லை
ஏரிகள் தொலைந்து போனது காரணமாக இருக்கலாம்.

அத்திமரக்காட்டில் திரியும் இருவாச்சிகளை
பார்ப்பதும் கூட
ஆலங்கட்டி மழை போலாகிவிட்டது

பட்டுப்போன பனை மரப் பொந்துகளில் இருந்த 
ஆந்தைகளை எந்த பனங்காட்டில் தேடுவது ?

ஆஸ்ட்ரிச் என்றால் என்னவென்று சொல்லும் சிறுமியிடம்
கானமயில் தெரியுமா எனக் கேட்கிறேன்.

பறவைகள் இல்லாத உலகத்தில் மனிதர்களால் வாழ முடியாது
என்று சொன்ன சலீம் அலியின் கூற்றை
மிகை எனச் சொல்லி சிரிக்கிறார்கள் நண்பர்கள்

மனிதர்கள் இல்லாது போன பின்பு
இதை யாரிடம் நிரூபிப்பது எனத் தெரியவில்லை