Sep 29, 2013

செங்கால் நாரை (White Stork)


1700 ஆண்டுகளுக்கு முன்பு சத்திமுற்றப் புலவர் பாடிய செங்கால் நாரையை முதன் முதலாக சுவிட்சர்லாந்தில் பார்த்தேன்.

நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வார்ச் செங்கால் நாராய்
நீயுநின் மனைவியும் தென்றிசைக் குமரியாடி
வடதிசைக்கேகுவீராயின்
எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி
பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு
"எங்கோன் மாறன்வழுதி கூடலில்
ஆடையின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே....


பறவைகள் என்னை சிந்திக்க வைக்கின்றன.
பறவைகள் என்னை பேச வைக்கின்றன.
பறவைகள் என்னை எழுத வைக்கின்றன.பறவைகள் என்னை பறக்க வைக்கின்றன......................

Sep 23, 2013

நியாயமாரே............

 ஆன்மிகம் என்றால் என்ன என்ற புரிதல் இல்லாத போது சமூகம் நிறைய இழப்புகளை சந்திக்கிறது. குறிப்பாக சுற்றுச்சூழல். ஒவ்வொரு ஆண்டும் இந்துக்களால் கொண்டாடப்படும் விநாயகர் சதூர்த்தி என்ற விழா காரணமாக நம்முடைய நீர் நிலைகள் பெருமளவில் மாசுபடுகின்றன.



நான் இந்த விழாவுக்கு எதிரானவனோ அல்லது இந்த மதத்துக்கு எதிரானவனோ அல்ல. குளங்களிலும் ஏரிகளிலும் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் முன்பு கரைக்கப்பட்டன. பிறகு ரசாயன கலவைகளால் செய்யப்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டன. அது நீரில் கரைந்து நீரை மாசுபடுத்தியது. இப்போது குளங்களிலும் ஏரிகளிலும் தண்ணீர் இல்லாத நிலையை நாம் உருவாக்கிவிட்டோம். இப்போது இந்த சிலைகள் கரைக்கப்படுவதில்லை. கொட்டப்படுகிறது.

இதை கடவுள் ஏற்றுக் கொள்வாரா? எதற்காக இதை செய்கிறோம் என இதை செய்பவர்கள் அறிவார்களா? நம் அடுத்த தலைமுறை நீர் இல்லாமல் தவிக்கப்போகிறது என்ற கவலையாவது உண்டா? பழனியில் இந்த ஆண்டு கொட்டப்பட்ட சிலைகளை கரைக்க வழியில்லாமல் போனதால் விவேகானந்தா சேவா டிரஸ்ட் அமைப்பு கொட்டப்பட்ட சிலைகளை அப்புறப்படுத்தி குளத்தை சுத்தப்படுத்தியுள்ளது.

 கடவுளை உண்மையாக நம்புகிறவன் கடவுள் படைத்த உலகை காப்பற்ற உழைப்பான். கெடுக்க மாட்டான்.

http://vivekananthasevatrust.blogspot.ch/2013/09/normal-0-false-false-false-en-us-x-none.html?utm_source=dlvr.it&utm_medium=facebook