Dec 6, 2015

வெள்ளத்தில் அடித்துச் செல்லட்டும் நம் மறதியும்....

சென்னையில் கொஞ்சமேனும் நீர் நிலைகள் மிச்சம் இருக்கின்றன. ஒரு வேலை அவைகளும் மூடப்பட்டிருந்தால் சென்னையின் நிலை என்னவாகியிருக்கும் என சிந்தித்துக் கூட பார்க்க முடியவில்லை. கடந்த சில ஆண்டுகளாக நீர் நிலைகளை பாதுகாக்க போராடியவர்களை நிச்சயம் நினைத்துப் பார்க்க வேண்டும். ஆரம்பத்தில் இருந்தே நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என கூக்குரலிட்ட பலரையும் யாரும் கண்டுகொள்ளவே இல்லை. அதிகாரிகளோ அரசாங்கமோ அவர்கள் சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளவில்லை. ஊடகங்கள் யாவும் நீர் நிலைகள் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்து செய்தி வெளியிட்டதில்லை. இந்த மழை வெள்ளம் நல்ல பாடத்தை கற்றுக் கொடுத்திருக்கிறது. ஆனால் இது விலை மதிப்பிலாத பாடம். இத்தனை உயிர்களையும் உடமைகளையும் பறிகொடுத்து நாம் இந்த பாடத்தை கற்கும்படி ஆகிவிட்டது.



இனியும் நீர் நிலைகளை பாதுகாக்க தவறினால் அதன் விளைவுகளை எதிர்காலம் சந்திக்க முடியாது போய்விடும். இந்த மழை வெள்ளம் நம் எல்லோரையும் கை கோர்க்க வைத்திருக்கிறது. இணைந்த கைகள் இன்னும் கூடுதலாக இறுக பற்றிக் கொள்ளட்டும். நீர் நிலைகளை பாதுகாக்கும் முயற்சியில் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நீர் நிலைகள் மட்டுமல்ல ஒட்டுமொத்த சூழலும் சிறப்பாக பாதுகாக்கப்பட வேண்டும். இயற்கையை தொலைத்துவிட்டு முன்னேறுவது சாத்தியமில்லாதது. மீண்டும் சறுக்கி வீழ்வதை யாராலும் தடுக்க முடியாது. எல்லா சூழல் மாற்றங்களும் ஏழைகளை கடுமையாக பாதிக்கின்றன. சொந்த நாட்டில் அவர்களை அகதிகளாக மாற்றுகின்றன. இயற்கையை பாதுகாக்கும் முயற்சியை அரசியல் கட்சிகள் முன்னெடுக்கும் என்பதில் எனக்கு துளியும் நம்பிக்கை இல்லை. எனவே அழுத்தம் கொடுக்க வேண்டியவர்கள் மக்களே. இதுவரை எந்த அரசியல் கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில், நீர் நிலைகளை பாதுகாப்போம் என்றோ, இயற்கையை பாதுகாப்போம் என்றோ உறுதி அளித்ததும் இல்லை. நிறைவேற்றியதும் இல்லை.



அழிவு ஏற்படும் போது மக்களை கையேந்தும் நிலையில் தான் எப்போதும் அரசு வைத்திருக்கிறது. இன்னும் நடிகர்களின் உதவியை எதிபார்ப்பது கேலிக் கூத்தாக இருக்கிறது.  எந்த நடிகர் எவ்வளவு பணம் கொடுத்தார் என்பது விவாதமாக இருக்கிறது. இந்த மனோபாவம் தான் நடிகர்களை தலைவர்களாக்கி மக்களை பிசைக்காரர்களாக்கிவிடுகிறது. நடிகர்கள் வேலை நடிப்பது, அதற்கான கூலியை அவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள். சினிமா பார்ப்பது நம் காலச்சாரத்தில் கலந்துவிட்ட ஒரு விஷம். நூறு ரூபாய் கொடுத்து படம் பார்க்கிறோம் என்பதற்காக எந்த நடிகனும் சேவை செய்ய வர வேண்டியதில்லை. நடிகர்களுக்கு கொடுக்கும் அழுத்தத்தை அரசுக்கு கொடுக்கலாம். ஆயிரம் கோடிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் வீணாய் போவது நம் கண் முன்னே நடக்கிறது. நடிகர்கள் சேவை செய்வது அவரவர் சொந்த விருப்பம். நண்பர்கள் ஒன்று சேர்ந்தால் பேசுவதற்குக் கூட சினிமா தான் முக்கிய பொருளாக இருக்கிறது. இனியாவது சூழல் குறித்து பேசுவோம். விவாதிப்போம். இயற்கையை மீட்டெடுப்போம்.



இன்னும் நம்மிடையே மனிதாபினம் இருக்கிறது. ஒற்றுமை இருக்கிறது. எங்கோ கேட்கும் அழு குரலுக்காக கண்ணீர் விடும் மனது இருக்கிறது. நான்கு நாட்களுக்கு தூக்கம் இல்லாமல் எந்த எதிபார்ப்பும் இல்லாமல் ஓடி ஓடி உதவி செய்யும் எண்ணமும் வலிமையும் இருக்கிறது. ஆனால் நம்மிடம் இருக்கும் மிகப்பெரிய பலவீனம் தவறு செய்யும் ஆட்சியளார்களை மன்னிப்பதும் மறந்து போவதும். மன்னிப்பதை விடவும் மறந்து போவது மிகப்பெரிய பலவீனம். அதுவே தவறு செய்பவர்களுக்கு மிகப்பெரிய பலம். இந்த வெள்ளத்தில் நம் மறதியும் அடித்துக் கொண்டு போகட்டும்.











Nov 22, 2015

இதுவே கடைசி வாய்ப்பாகவும் இருக்கலாம்..!!

எல்லோரும் மழை பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள். மழை நீர் ஆற்றில் வீணாக கலப்பதாக பலரும் கவலை கொள்கிறார்கள். மழை நீரை சேமிக்காதது மனிதனின் தவறு என்றும், ஏரி குளங்களை ஆக்கிரமித்ததின் விளைவே இது என்றும் பலர் ஒப்புக் கொள்கிறார்கள். சிலர் அரசாங்கம் சரி இல்லை என்று குரல் எழுப்புகிறார்கள். சில அரசியல்வாதிகள் முந்தைய அரசாங்கத்தை குற்றம் சாட்டுகிறார்கள். சிலர் மழையை குற்றம் என்கிறார்கள். எல்லோரும் நிறைய பேசுகிறார்கள். ஆனால் இன்னும் முழுமையான புரிதல் இருக்கிறதா என்பது சந்தேகமே.

தேர்தல் அறிக்கை வெளியிடும் அரசியல் கட்சிகளிடம் மக்கள் எவரும் ஏன் உங்கள் அறிக்கையில் இயற்கையை காப்பது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என கேள்வி எழுப்பியதுண்டா? இயற்கையை காப்பதற்கான எந்த முயற்சிகளையும் அரசு செய்யாதபோது கண்டும் காணதது போல இருந்தவர்கள் யார்? அரசு, அதிகாரிகள், மக்கள் என மாறி மாறி நாம் விரல் நீட்டிக் கொண்டே இருக்கிறோம். இப்படியே போனால் இந்த நிலை இன்னும் மோசமாகும். அரசியல் மாற்றங்களுக்கு தமிழ் நாடு எப்போதும் முன்னோடி மாநிலம் தான். யார் ஆளக்கூடாது என்பதை தீர்மானிக்கும் மக்கள் உள்ள மாநிலம். நாம் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டுமானால், தமிழ் நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாத்து அதன் நன்மைகளை நாம் அனுபவிக்க வேண்டுமானால் இங்கே "சூழல் அரசியல்" பேசியாக வேண்டும். இயற்கையை காப்பது குறித்து அரசியல் மேடைகளில் விவாதிக்க வேண்டும். அதற்கான காலத்தை நாம் எப்போதோ அடைந்துவிட்டோம்.



கிரானைட், தாதுமணல், ஆற்றுமணல், ஏரிகள், குளங்கள், ஆறுகள், மேற்கு தொடர்ச்சி மலை, காடுகள் பற்றி எறிவது, விலங்குகள் ஊருக்குள் வருவது, கடுமையான வெயில், வறட்சி மற்றும் வெள்ளம் என இயற்கை சார்ந்த நேரடியான அல்லது மறைமுகமான செய்திகளே ஒவ்வொரு நாளும் தலைப்புச் செய்திகளாக மாறி இருக்கும் சூழ்நிலையில் இயற்கை பாதிக்கப்படுவதற்கு மனிதனே காரணம் என்பதை ஒப்புக் கொண்டு செயல் திட்டங்கள் உருவாக்கப்பட்டு நடைமுறைபடுத்த வேண்டும்.

தென்னிந்தியாவை பொறுத்தவரை ஆறுகள் பெரும்பாலும் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்தே உருவாகிறது. இந்த ஆறுகள் எப்படி உருவாகிறது என்ற புரிதல் நமக்கு மிகவும் அவசியம். எங்கோ மலையில் பெய்யும் நீர் அப்படியே ஓடி வருவதில்லை. மேற்கு தொடர்ச்சி மலையின் உச்சியில் உள்ள சோலைக்காடுகள், அங்கே உள்ள புல்வெளிகளில் வருடம் முழுவதும் பெய்யும் மழையை ஒரு பஞ்சை போல தன்னுள்ளே தக்க வைத்துக்கொள்கிறது. இது மெல்ல மெல்ல நீரை வெளியிடுவதால் ஆற்றில் எப்போதும் நீர் ஓடிக்கொண்டே இருக்கும். அது கடலில் சென்று சேர்வதில் எந்த தவறும் இல்லை. ஆற்று நீர் கடலில் கலப்பது சூழல் சுழற்சியில் ஒரு பகுதியே.


ஆனால் மனிதர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? சோலைக் காடுகளை சுற்றுலாத் தலங்களாக்கி அங்கே சாலைகள் போட்டார்கள். யூக்கலிப்டஸ் மரங்களை நட்டார்கள். தேயிலைத் தோட்டங்களை உருவாக்கினார்கள். சோலைக் காடுகளை மாற்றி அமைத்தார்கள். ஆறுகளின் குறுக்கே அணைகளை கட்டினார்கள். ஏரி குளங்களை மூடினார்கள். பிளாஸ்டிக் குப்பைகளை டன் கணக்கில் பெருக்கி பூமியை நாசம் செய்தார்கள். இயற்கையில் எல்லா விதிகளையும் மாற்றி எழுதினார்கள். இயற்கை தன் விதியை எப்போதும் மாற்றிக் கொள்வதில்லை. அதை மனிதர்கள் புரிந்து கொள்ளவில்லை. ஒவ்வொரு வீட்டிலும் மழை நீரை சேமித்திருந்தால் நிலத்தடி நீரை காப்பாற்றி இருக்கலாம். காவிரியில் தண்ணீர் வேண்டும் என அரசியல் பேசும் எவரும் காவிரியில் கலக்கும் பவானி, அமராவதி மற்றும் நொய்யல் நதிகளை பற்றி பேசுவதில்லை. இயற்கை வளங்களை வியாபார பொருளாக அரசியல்வாதிகளும் மக்களும் பார்க்கத் தொடங்கியதன் விளைவால் நாம் சில தண்டனைகளை அனுபவிக்கத் தொடங்கி இருக்கிறோம். இந்த எண்ணத்தை இப்போதே மாற்றிக் கொள்ள வேண்டும். இயற்கையை வியாபாரப் பொருளாக பார்க்காமல், நம் செல்வமாக பார்க்க வேண்டும். தன் வீட்டுக் குழாயில் தண்ணீர் வரவில்லை என்றால் போராடும் மக்கள், மரங்களை வெட்டும் போதே வந்து போராட வேண்டும். மக்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள், மாணவர்கள் என எல்லோரிடம் மாற்றம் வேண்டும். இனி தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் பேராபத்தில் முடியும். இல்லையென்றால் தன் நிலத்தில் யார் வாழ வேண்டும் என்பதை இயற்கை நிச்சயம் தீர்மானித்துக் கொள்ளும் (கொல்லும்).







Apr 24, 2015

காடோடி : திரு.நக்கீரன்


இன்று உலக புத்தக தினம். வாசகர்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

சமீபத்தில் நான் வாசித்த ஒரு நூலை இன்று அறிமுகப்படுத்துவது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். திரு.நக்கீரன் அவர்கள் எழுதிய "காடோடி" என்ற நூலை வாசித்தேன்.

தமிழில் எத்தனையோ நாவல்கள் எழுதப்பட்ட போதிலும், காட்டை மையப்படுத்தி எழுதப்பட்ட நாவல்கள் மிகக் குறைவு என்றே நினைக்கிறேன். அதிலும் காட்டுயிரை பற்றிய புரிதலோடு, காட்டின் அழிவுகள் ஏற்படுத்தும் விளைவுகளை கருத்தில் கொண்டு இதுவரை நாவல் எழுதப்பட்டுள்ளதா என்பது சந்தேகமே. காடோடி ஒரு தொடக்கம் என்றே நினைக்கிறேன். காட்டுயிர் பற்றிய கட்டுரை நூல்களே எழுதப்பட்டு வந்த நிலையில் ஒரு கதைக்குள்ளும் காட்டுயிர் பேனலின் அவசியத்தை உணர்த்த முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார், திரு.நக்கீரன் அவர்கள்.



ஒரு பறவை பறக்கிறது என்ற காலம் கடந்து ஒரு இருவாசி பறக்கிறது என்பதை நாவலில் வாசிக்கும் போது, தமிழ் எழுத்துலகில் காட்டுயிர் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை துளிர்க்கிறது. இந்த நாவலின் மையப்பொருளே காடுகள் அழிவது பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் தான். தொல்குடி மனிதர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தார்கள் என்பதும், இன்று மனிதர்கள் தங்கள் பேராசைக்காக காட்டை எப்படி கொள்ளை அடிக்கிறார்கள் என்பதையும் தன் அனுபவத்தின் மூலமாக நாவலில் செதுக்கியிருக்கிறார்.

போர்னியோ காடுகள் அழிக்கப்படுவது குறித்து, அதிக விழிப்புணர்வு நம் சமூகத்தில் இல்லை. அந்த வகையில் இந்த நூல், நாம் அறிந்திராத ஒரு நிலப்பகுதியை அப்படியே கண்முன் நிறுத்துகிறது.

மரங்களை பெரிய அளவில் வணிகம் செய்யும் மேற்கத்திய நாடுகளின் பார்வையில் மரம் என்றால் என்ன அர்த்தம் என்று தொடங்குகிறது இந்த நூல் :

மரம் என்றால் அது இலைகள் அல்ல. பூக்கள் அல்ல. காய்கள் அல்ல. கனிகளும் அல்ல. ஏன். அது மரமே அல்ல. மரம் என்றால் அது வெறும் டாலர், டாலர், டாலர் மட்டுமே.

காடழிப்பு மெல்ல மெல்ல காட்டில் எப்படியான விளைவுகளை ஏற்படுத்துகிறது, ஒவ்வொரு காட்டுயிரும் எப்படியான சிக்கலை சந்திக்க நேரிடும் என காட்டுயிர் மீதான அக்கறையோடும் அறிவியல் புரிதலோடும் எழுதிருக்கிறார். காட்டை சுற்றுலாதலமாகவும், மது அருந்தும் இடமாகவும் மட்டுமே பார்க்கும் இன்றைய தலைமுறைக்கு, காட்டை பற்றிய புரிதலை இந்த நூல் உருவாகும். இந்த நாவலில் வரும் பிலியவ் என்ற தொல்குடி மனிதர் தான் நாவலின் நாயகன். வாசித்துப் பாருங்கள். பனுவலில் இந்த நூலை பெறலாம்.

https://crownest.in/kaadodi-novel-by-nakkheeran/




Mar 20, 2015

ஏன், எதற்கு, எப்படி : சிட்டுக்குருவிகள்

ஏன் சிட்டுக்குருவிகள்:

ஏன் சிட்டுக்குருவிகள் அழிந்து வருகின்றன என்ற கேள்வி பல்வேறு இடங்களில் முன்வைக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் இதன் வாழிடச் சூழல் அழிந்து வருவதே காரணம். முன்பிருந்ததை போல ஓட்டு வீடுகளோ கூரை வீடுகளோ இல்லாமல் போனது ஒரு காரணம். மற்றுமொரு காரணம் வேளாண் நிலங்களில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ சிட்டுக் குருவிகளை பாதிக்கின்றன.

எதற்கு சிட்டுக்குருவிகள்:

சிட்டுக்குருவிகளை எதற்காக பாதுகாக்க வேண்டும், அதனால் என்ன பயன் என ஒரு சில மனிதர்கள் (?) கேட்பதுண்டு. இந்தியாவில் சுமார் 1400 பறவை இனங்கள் வாழ்ந்தாலும் சிட்டுக்குருவிகள் அழிந்து வரும் பறவை இனங்களின் அடையாளம். ஒவ்வொரு பறவைக்கும் சூழலை சீராக வைப்பதில் பங்குண்டு. புழு பூச்சிகளை உண்டு வேளாண்மைக்கு உதவி செய்பவை சிட்டுக்குருவிகள்.

எப்படி சிட்டுக்குருவிகள்:

எப்படி சிட்டுக்குருவிகளை பாதுகாக்கலாம் என கேட்பவர்களுக்கு சிறிய அறிவுரை. இந்த படத்தில் உள்ளது போல, மண் சட்டிகளை அமைக்கலாம். மழை நீர் புகாதபடியும், அணில்களால் நெருங்க முடியாதபடியும் இது இருக்க வேண்டும். நாட்டுக்கம்பு போன்ற தானியங்களை சிட்டுக்குருவிகள் உண்ணும். குரோட்டன்ஸ் போன்ற அழகான(?) தாவரங்களுக்கு பதிலாக நம்முடைய நாட்டுச் செடிகளை வளர்த்தால் அதில் உள்ள பூச்சிகளை அவை உணவாக தின்னும்.



சிட்டுக்குருவிகளை காப்பாற்றுவது மிக எளிதானது. தேவை நல்ல மனம் மட்டுமே. உங்களால் முடியுமென்றால் செய்து பாருங்கள். முடியாதென்றால் சத்தமில்லாமல் கடந்து போய்விடுங்கள். நீங்கள் இதை வாசித்தீர்கள் என எனக்கு தெரியவா போகிறது.








Mar 16, 2015

பறவைகளுக்காக ஒரு கிராமம்


பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராமம் ஒன்றுக்கு சென்று திரும்பினேன். பறவைகளும் மனிதர்களும் இணைந்து வாழும் இது போன்ற ஒரு ஊரை உலக வரைபடத்தில் காண்பது அரிது. நாம் அருகில் சென்றால் சிட்டுக் குருவிகள் கூட நம் மீது நம்பிக்கை இல்லாமல் விருட்டென பறந்துவிடுகிறது. ஆனால் அந்த ஊரில், உருவில் பெரியதாக இருக்கும் மஞ்சள் மூக்கு நாரை கூட வீடு வாசலில் உள்ள மரங்களில் கைக்கெட்டும் தூரத்தில் கூடு கட்டி குஞ்சு பொரிக்கிறது. அந்த ஊர் மனிதர்கள் மீது பறவைகள் காட்டும் நம்பிக்கையின் அடையாளமாகவே இதை நான் பார்க்கிறேன். இப்படி ஒரு நம்பிக்கையை அந்த பறவைகள் அடைய வேண்டுமெனில், அந்த பறவைகள் மீது அந்த ஊர் மக்கள் செலுத்தும் அன்பு எத்தனை வியப்புக்குரியது.

பால் பாண்டி மாதிரியான மனிதர்களின் வாழ்வு மிகவும் ஆச்சர்யப்படுத்துகிறது. தன் வாழ் நாள் முழுவதையும் பறவைகளுக்காக அர்ப்பணித்து வாழும் இது போன்ற மனிதர்கள் பறவைகள் பெற்ற வரம். இயற்கை பெற்ற வரம். பறவைகளின் பின்னால் அலைந்து திரிந்து அவற்றை பற்றிய அறிவியலை உணர்ந்து அவற்றை பாதுகாக்கும் நல்லெண்ணம் கொண்ட மிகச் சிறந்த மனிதராகவே பால் பாண்டி அவர்களை பார்க்கிறேன்.

இயற்கையோடு இணைத்து வாழ்வதென்பது மிகவும் சிக்கலாகிவிட்ட இந்த கால கட்டத்தில், மனித நேயத்தை சத்தமில்லாமல் உணர்த்திக் கொண்டிருக்கிறது கூந்தன்குளம்.



Feb 10, 2015

கொங்கூர் பறவைகள்

நேற்று (09-Feb-2015) கொங்கூர் சென்றிருந்தேன். மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்த பறவைகளின் எண்ணிக்கையோடு ஒப்பிடும் போது சற்று குறைவாகவே இருந்தது. இருப்பினும் பல பறவைகளை பார்க்க முடிந்தது.

  1. Common Myna
  2. Yellow Wagtail
  3. Red Wattle Lapwing
  4. White Browed Wagtail
  5. Little Cormorant
  6. Painted Stork
  7. Common Sandpiper
  8. House Crow
  9. Jungle Crow
  10. Little Egret
  11. Oriental Ibis
  12. Cattle Egret
  13. Yellow Billed Babbler
  14. Spot billed Pelican
  15. Intermediate Egret
  16. Pond Heron
  17. Wood Sandpiper
  18. Rose Ringed Parakeet
  19. Spotted Owlet
  20. Pied Bushchat
  21. Little Ringed Plover
  22. Indian Golden Oriole
  23. Souther Coucal
  24. Green Bee Eater
  25. Black Winged Stilt
  26. Spot billed duck
  27. Little Grebe

Feb 9, 2015

கோதைமங்கலம் பறவைகள்



கோதைமங்கலம்  பறவைகள் 

நேற்று (08-Feb-2015) மாலை கோதைமங்கலம் சென்றிருந்தேன். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு குளத்திற்கு தண்ணீர் வந்திருந்தது. மேலும் பறவைகளும் வந்திருந்தன. நேற்று நான் பார்த்த பறவைகள்:

  1. வீட்டுக் காகம் (House Crow)
  2. நாகணவாய் (Common Myna)
  3. பைங்கிளி (Rose Ringed Parakeet)
  4. பனங்காடை (Indian Roller)
  5. கானாங்கோழி (White Breasted Waterhen)
  6. மடையான்  (Pond Heron)
  7. சிறிய கொக்கு (Little Egret)
  8. உன்னிக் கொக்கு (Cattle Egret)
  9. நாமக் கோழி (Common Coot)
  10. நீல தாழைக் கோழி (Purple Moorhen)
  11. தாழைக் கோழி (Purple Moorhen)
  12. புள்ளி மூக்கு வாத்து (Spot billed Duck)
  13. சிவப்பு மூக்கு ஆள்காட்டிக் குருவி (Red Wattled Lapwing)
  14. வக்கா (Black Crowned Night Heron)
  15. வெண் மார்பு மீன் கொத்தி (White Breasted Kingfisher)
  16. உள்ளான் (Common Sandpiper)
  17. பவளக்காலி (Common Redshank)
  18. சிறிய நீர்க் காகம் (Little Cormorant)
  19. மிளிர் அரிவாள் மூக்கன் (Glossy Ibis)
  20. செந்நாரை (Purple Heron)
  21. சாம்பல் இருவாச்சி (Indian Grey Hornbill)
  22. கருங்கரிச்சான் (Black Drongo)
  23. விசிறிவால் உள்ளான் (Common Snipe)





Jan 11, 2015

யாருக்கானது பூமி?


என்னுடைய இரண்டாவது நூல் "யாருக்கானது பூமி?" நேற்று சென்னை புத்தக கண்காட்சியில் வெளியிடப்பட்டது.

அரங்கு எண் 304-ல் கிடைக்கும்

நான் ஒரு பறவையை எப்படி ரசித்தேன் என்பதை விடவும், அது என்ன பறவை, அந்த பறவைக்கும் சூழலுக்கும் உள்ள தொடர்பு என்ன, அந்த பறவை இனம் பாதுகாப்பாக இருக்கிறதா? அவை அழிந்து வருகிறதென்றால் அதற்கு என்ன காரணம் போன்ற செய்திகளே எனக்கு முக்கியமாக தெரிந்தது. என்னுடைய பயணங்களும் தேடல்களும் நூல் வடிவில் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. காட்டுயிர் பற்றிய என்னுடைய அனுபங்களையும், சிந்தனைகளையும், மனக் குமுறல்களையும், செயல்பாடுகளையும் வெளிப்படையாக எழுதி இருக்கிறேன். காட்டுயிர் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை இந்த நூல் மக்களிடம் கொண்டு சேர்க்கும் என நம்புகிறேன். காட்டுயிர் பாதுகாப்புக்கு இந்த நூல் தூண்டுகோலாக இருக்கும் எனவும் நம்புகிறேன்.


Jan 6, 2015

யாருக்கானது பூமி? - விரைவில்....

என்னுடைய இரண்டாவது  நூல் "யாருக்கானது பூமி?" விரைவில் வெளியாகவுள்ளது. இது ஒரு கட்டுரைத் தொகுப்பு.