காந்தி விரும்பியது இதைத்தான்

கடந்த இருபது ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 2.5கோடியில் இருந்து 3.5 கோடியாக அதிகரித்திருக்கிறது. இதில் பழனி மலைத் தொடரில் உள்ள கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை ஆண்டுக்கு 1.6 கோடியாக இருக்கிறது. இத்தனை மக்களை உண்மையில் ஒரு மலைப்பகுதி தாங்குமா என்பது குறித்து சிந்திக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் கூடிக்கொண்டே போகும் சுற்றுலாப்பயணிகளின் வருகையால் விடுதிகளின் எண்ணிக்கையும், உணவகங்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகிறது. புதிய புதிய சுற்றுலாத் தளங்கள் சுற்றுலாப்பயணிகளை கவர்வதற்காக உருவாக்கப்படுகின்றன.


இவ்வாறு செயற்கையாக உருவாக்கப்படும் சுற்றுலாத்தளங்களால் கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஏற்கனவே மூச்சுத்திணறிக்கொண்டிருக்கும் கொடைக்கானல் கட்டுப்பாடின்றி அனுமதிக்கப்படும் வாகனங்களால் மேலும் பாதிப்படைகிறது. தொலை தூரத்தில் இருந்து வருபர்கள் கூட, வாகன நெரிசலால் நாள் முழுக்க சாலையிலேயே காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. இதனை சமாளிக்க புதிய சாலைகளை அமைப்பதும், சாலைகளை விரிவுபடுத்துவதும் தொடர்ந்து நடக்கிறது. 


சாலைகளின் ஓரங்களில் அமர்ந்து மது அருந்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அவர்கள் தூக்கி எறியும் அத்தனை பிளாஸ்டிக் குப்பைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 

கொடைக்கானல் செல்லும் எவரும் வெள்ளி அருவியை கடந்தே செல்ல வேண்டும். வெள்ளி அருவியின் அழகை ரசித்து படம் எடுத்துக்கொள்பவர்கள் அந்த பாலத்தின் மறுபுறத்தையும் கவனிக்க வேண்டும். வெள்ளி அருவி அருகில் இருக்கும் கடைகளின் வேண்டியதை வாங்கி உண்பவர்கள் அதன் மிச்சத்தை அங்கே தான் தூக்கி எறிந்துவிட்டு செல்கிறார்கள். கடைக்காரர்களும் தங்கள் மிச்சத்தை ஒரு பிளாஸ்டிக் பையில் கட்டி அங்கே தான் தூக்கி எறிவார்கள். தண்ணீர் மிகவும் மாசடைந்த நிலையில் ஓடையாகச் செல்வதை காணமுடியும். அந்த தண்ணீரைத்தான் அங்குள்ள குரங்குகள் அருந்துகின்றன.


இப்படியான சூழ்நிலையில் கொடைக்கானலில் உள்ள இளைஞர்கள் தாமாக முன்வந்து கொடைக்கானல்  நகரைச் சுற்றி அங்குள்ள குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் குப்பைகளை அகற்றுவது சாதாரண பணியல்ல. கடும் குளிரில், காடுகளில் அட்டை பூச்சிகளுக்கு நடுவே, காட்டுமாடுகளின் வாழ்விடங்களில் பெரும் சிரமங்களுக்கு இடையே இந்த சிறப்பான பணியினை செய்கிறார்கள். "சோலைக்குருவி" என்ற இந்த அமைப்பு எடுத்துவரும் இந்த முயற்சிக்கும் நாம் அருந்தும் தண்ணீருக்கும் நிறைய தொடர்பு உண்டு. 

தென்னிந்தியாவை பொறுத்தவரை ஆறுகள் பெரும்பாலும் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்தே உருவாகிறது. இந்த ஆறுகள் எப்படி உருவாகிறது என்ற புரிதல் நமக்கு மிகவும் அவசியம். எங்கோ மலையில் பெய்யும் நீர் அப்படியே ஓடி வருவதில்லை. மேற்கு தொடர்ச்சி மலையின் உச்சியில் உள்ள சோலைக்காடுகள், அங்கே உள்ள புல்வெளிகளில் வருடம் முழுவதும் பெய்யும் மழையை ஒரு பஞ்சை போல தன்னுள்ளே தக்க வைத்துக்கொள்கிறது. இது மெல்ல மெல்ல நீரை வெளியிடுவதால் ஆற்றில் எப்போதும் நீர் ஓடிக்கொண்டே இருக்கும். ஆனால் இந்த சோலைக்காடுகள் தற்போது பிளாஸ்டிக் பைகளாலும் குவளைகளாலும் மூச்சுத் திணறிக் கொண்டு இருக்கிறது.


மது அருந்திவிட்டு கண்ணாடி பாட்டில்களை உடைத்து இன்பம் காணும் மனிதர்களுக்கு இடையே இவர்கள் செய்யும் பணி கொடைக்கானலை குப்பைமேடாக மாற்றும் ஒவ்வொரு தனி மனிதருக்கும் குற்ற உணர்ச்சியை உருவாக்கும். கொடைக்கானல் நகரைச் சுற்றி பல இடங்களிலும் இவர்கள் தொடர்ந்து குப்பைகளை அகற்றி வருகிறார்கள். 

நாம் இவர்களுக்காக செய்ய வேண்டியதெல்லாம் ஒன்று தான். சுற்றுலாத்தளங்களை குப்பை மேடாக கருதாமல் கவனமாக செயல்பட்டு பழனி மலைத் தொடரின் பல்லுயிர் வளத்தை பாதுகாக்க உறுதியோடு துணை நிற்போம். 

Post a Comment

24 Comments

  1. More informative and actually your write up motivates me a lot

    ReplyDelete
  2. கொடைக்கானல் வந்து எங்களை வாழ்த்தி சமூகவலைதளத்தில் எங்களை அடையாள படுத்தும் சதீஸ் சாருக்கு சோலைக்குருவியின் நன்றி

    ReplyDelete
  3. வாவ்வ்வ்..., அசத்தல் தோழரே,
    "சோலைக் குருவிகள்" குழுவினரின் இந்த மாந்த நேயப் பண்பு
    மனித குலத்தின் ஆணவ ஆணிவேரையே அடியோடு பிடிங்கிப் போட
    முனைந்திருக்கிறது, வாழ்க தொண்டு, வளர்க மானுடம்.

    என்றேன்றும் பேரன்புடன் - ஆற்காடு ராஜா முகம்மது.

    ReplyDelete
  4. Kudos Solai kuruvi team 🌷🌷🌷

    ReplyDelete
  5. சோலைக் குருவிகளில் நானும் ஒரு குருவியாக இருப்பதில் பெருமை கொள்கிறேன் எங்களை பெருமைப்படுத்திய திரு சதீஷ் தோழர் அவர்களுக்கு நன்றி

    ReplyDelete
  6. நல்ல பதிவு! கோடை காப்பாளர்களின் சிறந்த செயல் மிகவும் பாராட்டுக்குரியது! பழனி சதீஷ் அவர்களின் வலை பதிவு அற்புதம்! வாழ்க மேலும் வளர்க!

    ReplyDelete
  7. Togather You made it!!! Keep Rocking Guys💪👏
    Letting Everyone to think globally and act locally 👌

    ReplyDelete
  8. குப்பைகள் இருந்தால் அங்கே இருக்கும் வியாபாரிகளிடம் அபராதம் வசூலிக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வியாபாரிகள் சம்மதிப்பார்களா?

      Delete
  9. Wow excellent work and descriptive writing 😍👏🏻

    ReplyDelete
  10. 😇 thanks sir 🎉👍👍😍

    ReplyDelete
  11. 👌👌👌🙏🙏🙏

    ReplyDelete
  12. “இவர்கள் செய்யும் பணி கொடைக்கானலை குப்பைமேடாக மாற்றும் ஒவ்வொரு தனி மனிதருக்கும் குற்ற உணர்ச்சியை உருவாக்கும்”, “சுற்றுலாத்தளங்களை குப்பை மேடாக கருதாமல் கவனமாக செயல்பட்டு பழனி மலைத்தொடரின் பல்லுயிர் வளத்தை பாதுகாக்க உறுதியோடு துணை நிற்போம்” - மிகவும் பொறுப்பான அழுத்தமான வரிகள்! அருமையான வலைப்பதிவு சதீஸ்.

    “சோலைக்குருவி” அமைப்பினரின் குப்பைகளை அகற்றும் கடுமையான பணி மிகவும் உன்னதமானது மற்றும் பாராட்டுக்குரியது. நாம் ஒவ்வொருவரும் நெகிழி பயன்படுத்துவதை தவிர்த்து, குப்பைகளை அவற்றுக்கென வைக்கப்பட்டிருக்கும் குப்பைத்தொட்டிகளில் போட்டு முன்மாதிரியாக இருந்து, மற்ற அனைவருக்கும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும். “Prevention is better than cure“ எனும் வாசகத்துக்கேற்ப குப்பைகளை கண்ட இடங்களில் தூக்கியெறிவதை அறவே தவிர்க்கவேண்டும். “சோலைக்குருவி” அமைப்பினர் மற்ற தன்னார்வ தொண்டர்கள், நிறுவனங்கள் மற்றும் அங்குள்ள அரசாங்க அதிகாரிகளின் உதவியோடு இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் தொடர்ச்சியாக மேற்கொண்டால் குப்பைத்தொட்டிகளுக்கு வெளியே போடும் குப்பைகளின் அளவும் மெதுவாக குறையும், அதுவே நாளடைவில் “சோலைக்குருவி” அமைப்பின் குப்பைகளை அகற்றும் வேலைப்பளுவும் குறைய வழிவகுக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.

    - கிருஷ்ணகுமார் கன்னியப்பன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி அத்தான். தொடர்ந்து "சோலைக்குருவி" நண்பர்கள் பணி செய்து கொண்டே தான் இருக்கிறார்கள். மக்களும் குப்பைகளை கொட்டிக்கொண்டே தான் இருக்கிறார்கள். எவ்வளவு விழிப்புனர்வு ஏற்படுத்தினாலும் மாற்றம் இன்னும் வரவில்லை. கடுமையான நடவடிக்கைகள் மூலமாகவும் கொடைக்கானல் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதன் மூலமாகவும் தான் மாற்றத்தை கொண்டுவர முடியும். சோலைக்காட்டிற்குள் மூன்று அடி வரை பிளாஸ்டிக் குப்பைகள் இருக்கிறது. இப்படியே தொடர்ந்தால் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்படும்.

      Delete
  13. வருங்கால தலைமுறை நலமாக வாழ சுற்றுச்சூழலை பேணி பாதுகாப்பது நம் அனைவரின் கடமை.. தோழர்களுக்கு வாழ்த்துகள்.👍

    ReplyDelete